Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
`பிள்ளைய கட்டுவிரியன் கடிச்சதே தெரியல; கடவுள் போல அரசு மருத்துவர்கள் மீட்டாங்க!' - நெகிழும் பெற்றோர்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள குளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவர், கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி பாப்பாத்தி. இந்த தம்பதியினரின் ஆறு வயது மகள் மதுஸ்ரீ. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த சிறுமியின் தாய் பாப்பாத்தி, தனது தாயார் வீட்டில் மது ஸ்ரீயையும், அவரது சகோதரியையும் விட்டுள்ளார். அப்போது, அங்கு தங்கியிருந்த சிறுமி மதுஸ்ரீக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பாப்பாத்திக்கு அவரது தாயார் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பாப்பாத்தி பதறியடித்தபடி சென்று சிறுமி மதுஸ்ரீ-யை பார்த்தபோது, மதுஸ்ரீயின் கண்கள் திறக்க முடியாமல் தொங்கி இருந்துள்ளது. பின்னர், பாப்பாத்தி அவரது தாயாரிடம் கேட்டபோது, மதுஸ்ரீ வயிறு வலி என்று என்று சொன்னதாக கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து, உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த சிறுமியை கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்குரிய பிரச்னையை அவர்கள் கண்டறிய முடியாததால், பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சிறுமியின் நிலைமையைப் பார்த்துவிட்டு, 'சிறுமி பயந்திருக்கும்' என்று எண்ணி பேய் பிசாசு கோளாராக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இதனால், சிறுமியின் பெற்றோர் அருகே உள்ள ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின்னரும் சிறுமிக்கு அங்கும் சரியாகாததோடு, அதன்பிறகு சிறுமிக்கு மேலும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், 24 மணி நேரம் கழித்து சிறுவியின் தாய்மாமா உதவியோடு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மதுஸ்ரீயை சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அப்போது, சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமிக்கு அடிபட்டோ அல்லது குடல் வால்வு பிரச்னையால் ஏற்படும் வயிற்று வலியோ இல்லை என்று உறுதிசெய்தனர். அதன்பின்னர், அந்த சிறுமி மதுஸ்ரீ கண்களை திறக்க சொல்லியுள்ளனர். ஆனால், சிறுமி கண்களை திறக்க முடியாமல் கைகளால் கண்களை திறக்க முயற்சி செய்துள்ளார். பின்னர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவக் குழுவினர், 'சிறுமியை கட்டுவிரியன் பாம்பு கடித்திருக்கலாம். அந்த பாம்பு கடித்தால் தான் இது மாதிரியான பாதிப்பு வரும். மற்ற பாம்புகள் கடித்தால் பாம்பு கடித்த தடமோ அல்லது கடித்த இடத்தில் வீக்கமோ இருக்கும்' என்று தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, உடனடியாக சிறுமிக்கு பாம்பு கடி விஷம் முறிவு மருந்து கொடுத்து சிகிச்சையை தொடங்கினர். முதலில், அந்த விஷ முறிவு மருந்தை சிறுமிக்க கொடுக்கும் பொழுது சிறுமி உடல் அதை ஏற்றுக் கொள்ளாமல் பல்வேறு தொந்தரவுகளை கொடுத்திருக்கிறது. அதற்கும் தொடர்ந்து மருத்துவர்கள் இடைவிடாமல் சிகிச்சை மேற்கொண்டு மொத்தமாக 15 முறை விஷமுறிவு மருந்தை கொடுத்து தொடர்ந்து ஒரு வாரம் சிகிச்சை அளித்தனர். பின்னர், சிறுமியை நலமுடன் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்து சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கலைவாணி,

"கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 6 வயது சிறுமி கண்கள் தொங்கியபடி சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்று முதலில் தெரியவில்லை. பின்னர்தான் பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு இறுதியாக சிறுமியை கட்டுவிரியன் பாம்பு கடித்திருக்கும் என்று முடிவுக்கு வந்து பாம்பு கடி விஷ முறிவு மருந்தை கொடுத்து சிகிச்சையை தொடங்கினோம். தொடர்ந்து சிறுமியை தொடர் சிகிச்சையில் வைத்து அவரை மீட்டு உள்ளோம். மற்ற பாம்புகள் கடித்தால் பாம்பு கடித்த தடம் இருக்கும். கடித்த இடத்தில் வீக்கம் இருக்கும். ஆனால், கட்டுவிரியன் பாம்பு கடித்தால் பாம்பு கடித்த தடமே இருக்காது. இந்த பாம்பு கடித்தால் உடனடியாக நரம்பு மண்டலத்தை தான் பாதிக்கும். மேலும், கண்கள் தொங்கி பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனை, நாட்டு வைத்தியர் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விட்டு 24 மணி நேரம் கழித்து தான் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இருப்பினும், சிறுமிக்கு உரிய சிகிச்சை அளித்து சிறுமியை உயிருடன் பாதுகாப்பாக மீட்டுள்ளோம். இந்த சிகிச்சையை வெளியில் செய்தால் ஒன்றரை லட்சம் முதல் ரூ. 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும் ஆனால், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த சிகிச்சையை இலவசமாக அளித்துள்ளோம். மேலும், புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்துவித கட்டமைப்பும், விஷமுறிவு மருந்துகளும் உள்ளது. பொதுமக்கள், பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்களது குழந்தைகளை இருட்டுப் பகுதி, வயல்வெளிகளில் விடக்கூடாது. தொடர்ந்து தங்கள் கண்காணிப்பிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏதேனும் தொந்தரவு இருந்தால் உடனடியாக அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம்/அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்" என்றார்.
அதேபோல், இதுபற்றி குழந்தைகள் நல தலைமை மருத்துவர் அரவிந்த்,
"24 மணி நேரம் தாமதமாக குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் சவால் நிறைந்ததாக இருந்தது. முதலில் விஷம் முறிவு மருந்து கொடுக்கும் பொழுது சிறுமிக்கு ஆக்சிஜன் அளவு குறைந்தது. ஆனால், நம்பிக்கையுடன் தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை அளித்து சிறுமியை நலமுடன் மீட்டு அவரது பெற்றோரிடம் கொடுத்துள்ளோம். இது, எங்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருவதாக இருக்கிறது" என்றார்.

சிறுமி சுபஸ்ரீயின் பெற்றோர்,
"நாங்கள் கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்த்து வருகிறோம். எங்களால் அதிகமாக செலவழித்து சிகிச்சை மேற்கொள்ள முடியாது. ஏற்கனவே பத்தாண்டுகள் குழந்தை இல்லாமல் தான் எனது முதல் பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது பெண் குழந்தை தான் மதுஸ்ரீ. மகளுக்கு பாம்பு கடித்ததில் கண்கள் தொங்கி கண்கள் மூடிவிட்டது. அவருக்கு என்ன தொந்தரவு என்று தெரியாமல் முதலில் அருகே உள்ளவர்கள் பேய் பிசாசு கோளாறாக இருக்கும் என்று தெரிவித்தனர். அதற்கும் சென்று பார்த்தோம். ஆனால் அதிலும் சரியாகவில்லை. பின்னர், திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கும் சிறுமியை முடிந்த அளவு தான் காப்பாற்ற முடியும் என்று கூறினர். அதற்குப் பிறகுதான் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். தனியார் மருத்துவமனையில் எல்லாம் எங்கள் குழந்தையை முடிந்தால் தான் காப்பாற்ற முடியும் என்று கூறினார்கள். ஆனால், இங்கு உள்ள மருத்துவர்கள் உடனடியாக என் குழந்தைக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை மேற்கொண்டு காப்பாற்றி கொடுத்துள்ளனர். எங்கள் மகளுக்கு என்ன பிரச்னை என்றே தெரியாமல் அல்லாடினோம். 24 மணி நேரம் அவளுக்கு என்ன சிக்கல் என்று புரியாமல் விழிபிதுங்கி நின்னோம். இந்நிலையில்தான், கடைசி நம்பிக்கையாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிள்ளையை தூக்கிட்டு போனோம். அவர்கள் பிள்ளையின் பிரச்னையை கண்டுபிடித்ததோடு போராடி என் பிள்ளையை காப்பாற்றியுள்ளனர். அவர்கள் தான் எங்களுக்கு கடவுள் மாதிரி. காலத்துக்கும் மருத்துவர்களை மறக்கமாட்டோம்" என்றார்கள் உணர்ச்சி மேலிட!



















