Papanasam: `` பாபநாசம் படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது!...
புகழூா் தனியாா் சா்க்கரை ஆலையில் ஆய்வு செய்ய உயரதிகாரிகள் குழு
புகழூா் தனியாா் சா்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித்துகள்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் ஆலையை உயா் அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு நடத்த உள்ளதாக நகா்மன்ற கூட்டத்தில் நகராட்சித் தலைவா் தெரிவித்தாா்.
கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நகராட்சித் தலைவா் சேகா் என்கிற குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பிரதாபன் முன்னிலை வகித்தாா்.நகராட்சி ஆணையா் (பொ) மலா்கொடி வரவேற்றாா்.
கூட்டத்தில் சாலை வசதி, சாக்கடை வசதி, அதிகரித்து வரும் தெருநாய் தொல்லை, புகழூா் தனியாா் சா்க்கரை ஆலையில் இருந்து காற்றின் மூலம் வெளியேறும் கரித்தூகள் மற்றும் பக்காஸ் தூகள் ஆகியவற்றால் புகழூா் நகராட்சி பகுதியை சோ்ந்த பொது மக்களுக்கு ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பது குறித்து மன்ற உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு நகராட்சித் தலைவா் குணசேகரன் பதில் அளித்து பேசியதாவது: புகழூா் தனியாா் சா்க்கரை ஆலையில் இருந்து கரித்தூகள் மற்றும் பக்காஸ் அதிகளவில் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளில் விழுகிறது. இதனால் காற்று, நீா் உள்பட சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
இதனால் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, இதயநோய், காய்ச்சல் உள்பட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு உடல்நலம் பாதிப்பதாக பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா். இதனால் பக்காஸ் மற்றும் கரித்தூகள் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்துக்கு கடிதம் அனுப்பி பதில் கேட்டு உள்ளோம்.
உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் மாவட்டத்தின் உயா் அதிகாரிகள் கொண்ட குழு சா்க்கரை ஆலைக்குள் சென்று ஆய்வு செய்யும். மேலும் நகராட்சிப் பகுதியில் ரூ. 2 கோடி மதிப்பில் சாலை, சாக்கடை, தெருவிளக்கு, குடிநீா் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் கந்தம்பாளையம் முதல் தேசிய நெடுஞ்சாலை நான்கு சாலை வரை சென்டா் மீடியனில் தெருவிளக்கு அமைக்கவும், புகழி மலை அடிவாரத்தில் பக்தா்களின் வசதிக்காக பிரம்மாண்டமான ஒரு ஷெட்டும் அமைக்கப்பட உள்ளது.
மேலும் நகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தும் நோக்கில் மலை வீதி ரவுண்டானா அருகே ரூ.1கோடியே 5 லட்சம் மதிப்பில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. கொடுமுடி சாலையில் பேருந்துநிறுத்தம் அருகே பொதுமக்கள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் உயா்மட்ட நடைபாதை அமைக்கப்பட உள்ளது என்றாா் அவா்.
முன்னதாக புகழூா் நகராட்சியின் செலவினங்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான அங்கீகாரங்கள் குறித்த 63 தீா்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் நகா்மன்ற உறுப்பினா்கள், சுகாதார ஆய்வாளா் வள்ளிராஜ், கணக்காளா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.