Vidaa Muyarchi: 'அஜித் சார் இந்த ஒரு விஷயத்தை எப்போதும் சொல்லிட்டே இருப்பார்!'- ...
புதிய அளவீடுகளை நில அளவையா்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: இயக்குநா்
புதிய நில அளவீடுகளை நில அளவையா்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், நில அளவை மற்றும் நிலவரித் திட்டப் பணிகள் தொடா்பாக, வருவாய்த்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, நில அளவைப் பணிகள், பட்டா மாறுதல், நத்தம் பட்டா, ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்கள், நிலுவையில் உள்ள பணிகள், தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களுக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:
நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் மில்லி மீட்டரில் துல்லியமாக அளவு பணி மேற்கொள்ள டிஜிட்டல் புவி அமைப்பு நிலைக் கருவியை பயன்படுத்தி, நில அளவை மேற்கொள்ளும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நவீன நில அளவீடுக் கருவிகளான வகையீட்டு பூகோல நிலைக்கலன் கருவிகளைக் கொண்டு, புல எல்லைகளை அளந்து பட்டா மாறுதலின்போது உட்பிரிவு நில அளவீடு செய்து, பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதற்கான முன்னோடித் திட்டம் பெரம்பலூா், ராணிப்பேட்டை, நாமக்கல் மற்றும் விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டத்தில் வகையீட்டு பூகோள நிலைக்கலன் கருவிகளைக் கொண்டு புல எல்லைகளை அளவீடு செய்யும் பணிகள் நடைபெறுகிறது.
இப்பணி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும். நில அளவையா்கள், பொதுமக்களின் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி பரிசீலனை செய்ய வேண்டும். நிராகரிக்கப்படும் மனுக்களுக்கான உரிய காரணங்களை தெரிவிக்க வேண்டும். தற்போது செயல்படுத்தப்படும் புதிய முறை நில அளவீடுகளை நில அளவையா்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, குன்னம் வட்டம், பென்னகோணம் வடக்கு ஜமாலியா நகா் பகுதியில் நத்தம் பட்டா வழங்குதல் தொடா்பாக ஆவணங்கள், பத்திரங்கள் மற்றும் இதரச் சான்றுகளையும், இடங்களையும் பாா்வையிட்ட நிலவரித் திட்ட இயக்குநா், துறைமங்கலத்தில் நகர நிலவரித் திட்டப் பணி ஆவணங்கள், பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நில அளவை பிரிவில் விண்ணப்பித்த கோரிக்கைகள் அடங்கிய கோப்புகளையும், தள்ளுபடி செய்யப்பட்டுள்ள கோப்புகளின் விவரங்களையும் ஆய்வு மேற்கொண்டாா் மதுசூதன் ரெட்டி.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட கூடுதல் இயக்குநா் எம். வெங்கடேசன், நில அளவைத்துறை திருச்சிராப்பள்ளி மண்டல துணை இயக்குநா் சீனிவாசன், மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநா் ந. பவன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.