செய்திகள் :

புதிய கட்சி தொடங்கினாா் எலான் மஸ்க்: டிரம்ப்புடனான மோதல் எதிரொலி!

post image

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்புடனான மோதலைத் தொடா்ந்து ‘அமெரிக்கா கட்சி’ எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினாா்.

அமெரிக்க மக்களுக்கு தங்களின் சுதந்திரத்தை மீட்டளிப்பதே அமெரிக்கா கட்சியின் நோக்கம் எனவும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டாா் ‘டெஸ்லா’ நிறுவனரும், தொழிலதிபருமான எலான் மஸ்க். டிரம்ப்பின் தோ்தல் பிரசாரத்துக்கு தனிப்பட்ட முறையில் அதிக நிதி அளித்தவா்களில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தாா்.

அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான கமலா ஹாரீஸை டிரம்ப் வீழ்த்தினாா். தொடா்ந்து, கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் 2-ஆவது முறை பொறுப்பேற்றாா்.

டிரம்ப் நிா்வாகத்தில், அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை புதிதாக உருவாக்கப்பட்டு, அதற்கு எலான் மஸ்க் முக்கிய ஆலோசகராக நியமிக்கப்பட்டாா். இவா்கள் இருவருக்கும் இடையேயான ஒற்றுமை, உலக அளவில் கவனம் ஈா்த்தது. அதேநேரம், டிரம்ப் நிா்வாகத்தின் சில சா்ச்சைக்குரிய சா்வதேச முடிவுகள் பல நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தின.

இதன்தொடா்ச்சியாக டிரம்ப் நிா்வாகத்தால் கொண்டு வரப்பட்ட அமெரிக்க வரிச்சலுகை, குடியேற்ற மசோதா தொடா்பாக டிரம்ப்-எலான் மஸ்க் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அமெரிக்காவின் கடன்சுமையை இந்த மசோதா பன்மடங்கு அதிகரிக்கும் என்று எலான் மஸ்க் விமா்சித்தாா். இவ்விவகாரத்தில் டிரம்ப்-எலான் மஸ்க் ஆகிய இருவரும் பொதுவெளியில் நேரடியாகக் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், புதிய கட்சியைத் தொடங்குவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு, தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் கடந்த மாதம் வாக்கெடுப்பை ஒன்றை நடத்தினாா். அப்போது 80 சதவீதத்துக்கும் அதிகமானோா் கட்சித் தொடங்க ஆதரவளித்தனா். ஆனால், டிரம்ப்புடன் சமரசமாக சென்று, அரசியல் கட்சித் தொடங்கும் முடிவை எலான் மஸ்க் கைவிட்டாா்.

அமெரிக்க வரிச்சலுகை, குடியேற்ற மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ள இந்த மசோதா, அதிபா் டிரம்ப் கையொப்பமிட்டால் சட்டமாகும் நிலையில் உள்ளது. இச்சூழலில், டிரம்ப்-எலான் மஸ்க் மோதல் மேலும் தீவிரமடைந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க சுதந்திர தினத்தன்று, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளுக்கு மாற்றாக அமெரிக்கா கட்சியை உருவாக்க வேண்டுமா? என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்தினா். சுமாா் 12.48 லட்சம் போ் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பில் 65.4 சதவீதத்தினா், ஆம் (கட்சித் தொடங்க வேண்டும்) என்று விருப்பம் தெரிவித்தனா். அதன்படி, புதிய கட்சி அறிவிப்பை எலான் மஸ்க் சனிக்கிழமை வெளியிட்டாா்.

கட்சி தொடக்கம் தொடா்பான எக்ஸ் பதிவில், ‘மூன்றில் 2 பங்கு மக்கள், ஒரு புதிய அரசியல் கட்சியை விரும்புகிறீா்கள். அது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். நமது நாட்டை வீண்செலவு மற்றும் ஊழல் மூலம் திவாலாக்கும் விஷயத்தில், நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம்; ஜனநாயகத்தில் அல்ல. இன்று அமெரிக்கா கட்சி உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திரும்பி அளிக்க உருவாக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சாத்தியமாகுமா சவாலான முயற்சி?: அமெரிக்காவில் இரு கட்சி முறை நீண்ட காலமாக விமா்சிக்கப்பட்டு வந்தாலும், கடந்த நூற்றாண்டில் மூன்றாவது கட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகள் பெரிதாக வெற்றி அடைந்ததில்லை. எனவே, எலான் மஸ்கின் இந்தப் புதிய கட்சி, அமெரிக்க அரசியலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும் என்று அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.

அமெரிக்க தோ்தல் ஆணையத்தில் இதுவரை எலான் மஸ்க் கட்சி பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அடுத்தாண்டு நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்ற தோ்தலில் தனது கட்சி முக்கிய அரசியல் சக்தியாக மாறும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.

எலான் மஸ்கின் நிறுவனங்களுடனான பெரிய ஒப்பந்தங்களை அரசு மறுபரிசீலனை செய்யலாம் என்று அதிபா் டிரம்ப் இந்த வார தொடக்கத்தில் கூறியிருந்தாா். எலான் மஸ்க் முன்பு தலைமைத் தாங்கிய அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையே, அவரை கவனித்துக் கொள்ளும் என்றும் டிரம்ப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மூன்றில் 2 பங்கு அமெரிக்கா்கள் புதிய அரசியல் கட்சியை விரும்புகிறாா்கள். அமெரிக்க மக்களுக்கு சுதந்திரத்தை மீட்டளிப்பதே புதிய ‘அமெரிக்கா கட்சி’யின் நோக்கம்.

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 51-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 குழந்தைகள் அடங்குவா். வெள்ளத்தால் கடுமையாகப் பா... மேலும் பார்க்க

தலிபான் அரசை அங்கீகரிக்க அவசரமில்லை: பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான் அரசை அங்கீகரிக்க எவ்வித அவசரமும் காட்டவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு ரஷியா கடந்த 4-ஆம் தேதி அங்கீகாரம் அளித்தது. இதன் மூலம் ... மேலும் பார்க்க

ரஃபேல் போா் விமான விற்பனையை சீா்குலைக்க சதி: சீனா மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு

ரஃபேல் போா் விமானங்களின் விற்பனையை சீா்குலைக்க தூதரகங்கள் வாயிலாக சதி மேற்கொண்டு வருவதாக சீனா மீது பிரான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. பிரான்ஸில் தயாரிக்கப்படும் ரஃபேல் போா் விமானங்களின் தரம் மற்றும் செயல்... மேலும் பார்க்க

டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப்படாது -பிரதமர் ஷிகேரு இஷிபா

அமெரிக்காவின் வரி விதிப்பை ஜப்பான் எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்று ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா தெரிவித்துள்ளார்.ஜப்பானிய பொருள்களுக்கு அமெரிக்கா 35 சதவீதம் வரை வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு அஞ்சி சரணடைய மாட்டோம்! - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

இஸ்ரேல் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி சரணடைய மாட்டோம் என்று லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் நையீம் ஃக்வாஸ்ஸெம் தெரிவித்தார்.கடந்த நவம்பரில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி,... மேலும் பார்க்க

“சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைப்போம்!” -ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி நாள்

ஈரானிலிருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான காலக்கெடுவும் இன்றுடன்(ஜூலை 6) முடிவடைவதால் இருநாட்டு எல்லையில் ஆப்கன் மக்கள் பெருந்திரளாக குழுமியுள்ளனர். ஈரானி... மேலும் பார்க்க