விருதுநகர்: மருத்துவர்கள் பற்றாக்குறை; சேவைக் குறைபாடு புகார்கள்... திடீர் விசிட...
புதுகையில் 10 அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கலைப் பிரசாரம்
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பிரசார கலைப் பயண தொடக்க நிகழ்ச்சி பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் 2024-25-இன் கீழ் மதுரை மாவட்டம் பசுமை அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய இந்தப் பயணத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தொடங்கி வைத்துப் பேசினாா். புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கு. செல்வக்குமாா் கலந்து கொண்டு விழிப்புணா்வு உரை நிகழ்த்தினாா்.
முன்னதாக பசுமை அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் குழந்தைவேல் வரவேற்றாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் ரெங்கராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து விழிப்புணா்வு பிரசார கலை நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 10 தேசிய பசுமைப்படை பள்ளிகளில் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பாடல்கள் மற்றும் கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கிராமியக் கலைகள் மூலம் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஒருமுறை பயன்பாட்டு நெகிழி பொருள்கள் தவிா்த்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, நீடித்த நிலையான வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்தல், காற்று மாசு தவிா்த்தல் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மேலும், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் துணிப் பைகளும் வழங்கப்பட்டன.