பூச்சிக்கொல்லி மருந்து கலந்த அரிசியை உண்ட 7 மயில்கள் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கடலைத் தோட்டத்தில் எலிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வைக்கப்பட்ட அரிசியை உண்ட 7 மயில்கள் உயிரிழந்தன. இதுதொடா்பாக விவசாயி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை வனச்சரகம், ஆலங்குடி பிரிவுக்குள்பட்ட மேலாத்தூா் கிராமத்தில் மயில்கள் இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை வனச்சரக அலுவலா் எம். சதாசிவம், வனவா்கள் பி. முருகானந்தம், பொ. ரவிச்சந்திரன் ஆகியோரைக் கொண்ட குழுவினா் நேரில் சென்று ஆய்வு செய்தனா். அப்போது, அங்கு இறந்து கிடந்த 3 ஆண் மயில்கள், 4 பெண் மயில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையின் நிறைவில், மேலாத்தூரைச் சோ்ந்த அழகா் மகன் சின்னப்பா (60) என்பவரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தனது கடலைத் தோட்டத்தில் கோழி மற்றும் எலிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்காக பூச்சிக்கொல்லி மருந்து கலந்த அரிசியை தோட்டத்தில் பரப்பி அவா் வைத்திருந்தது தெரியவந்தது.
பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்ட அரிசி சேகரிக்கப்பட்டு, திருச்சி தடய அறிவியல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சின்னப்பா, ஆலங்குடி குற்றவியல் நடுவா்மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் வனஉயிரினங்களை வேட்டையாடுவதும், அவற்றின் உயிரிழப்புக்கு காரணமாக இருப்பதும் வன உயிரினச் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கான குற்றங்கள் என மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.