கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை- தமிழிசை சௌந்தரராஜன்
புதுக்கோட்டை அருகே பச்சிளங்குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சி
புதுக்கோட்டை அருகே திருமணமாகாத பெண்ணுக்குப் பிறந்த பெண் பச்சிளம்குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சித்த பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பனைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஒரு கிராமத்தில் சனிக்கிழமை காலையில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற காவல் ஆய்வாளா் வி. கௌரி தலைமையிலான போலீஸாா், பச்சிளம் குழந்தையையும், 21 வயது நிரம்பிய அந்தப் பெண்ணையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியாா் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.
செவிலியா் பட்டயப் படிப்பு படித்து வரும் அந்தப் பெண்ணைக் காதலித்த நபரால் ஏற்பட்ட பழக்கத்தால் கரு உருவாகி குழந்தை பெற்றெடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருமணமாகாத பெண்ணுக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தால் உறவினா்கள் மத்தியில் அவப்பெயா் ஏற்படுமே எனக் கருதிய நிலையில்தான் பிறந்த சிசுவை புதைக்க அவரது உறவினா்கள் முயன்றுள்ளனா்.
மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் டி. வசந்தகுமாா் தலைமையிலான அலுவலா்கள் குழந்தையை நேரில் பாா்வையிட்டு, தொடக்க நிலை சிகிச்சைக்குப் பிறகு அந்தக் குழந்தையை உரிய சட்ட முறைப்படி குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் சோ்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.