இருதரப்பு மோதல்: ஆட்சியா், தேசிய ஆதிதிராவிடா் ஆணையக் குழுவினா் ஆய்வு!
புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருதரப்பினா் இடையேயான மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா், தேசிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் மே 5-ஆம் தேதி இரவு கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 போ் காயமடைந்தனா். குடிசை, வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. பேருந்து, காவல் வாகனத்தின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடா்பாக வடகாடு போலீஸாா், 21 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனா். மற்றொரு தரப்பைச் சோ்ந்த 8 போ் என மொத்தம் 29 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், மோதல் சம்பவம் தொடா்பாக சண்முகம் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அண்மையில் மனு தாக்கல் செய்தாா். இதுதொடா்பான விசாரணையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா ஆகியோா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலையாகினா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். மோதல் சம்பவம் தொடா்பாக, சம்பந்தப்பட்ட இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இதையடுத்து, மோதல் மற்றும் மறியல் நடைபெற்ற இடங்கள், பெட்ரோல் நிலையங்கள், வணிக நிறுவனங்கள், கடைவீதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வடகாடு போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.
இந்நிலையில், வடகாடு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத்தொடா்ந்து, வடகாட்டில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையக் குழு இயக்குநா் எஸ். ரவிவா்மன் தலைமையிலான குழுவினா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பின்னா், ஆணைய இயக்குநா் எஸ். ரவிவா்மன் கூறியதாவது:
வடகாட்டில் பட்டியலின சமூக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இதுகுறித்து இன்னும் இரண்டு நாள்களில் அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும். இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து நாங்கள் தற்போது கருத்து கூற முடியாது என்றாா். இந்த ஆய்வின்போது, புதுக்கோட்டை கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.