டீ விற்றவரின் வதந்தியே மகாராஷ்டிர ரயில் விபத்துக்குக் காரணம்: அஜித் பவார்
புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை: சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றம்!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமக் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
குறிப்பாக, திருமயம் அருகே உள்ள துலையானூரில், அதன் அருகே உள்ள வலையன்வயலைச் சேர்ந்த ராசு மற்றும் ராமையா ஆகியோர் நடத்தி வரும் ஆர்.ஆர் குரூப்ஸ் என்ற பெயரிலான கிரஷர் மற்றும் கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார். இந்நிலையில் தான், ஜகபர் அலி கடந்த 17-ம் தேதி அன்று தொழுகை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது குவாரி உரிமையாளர்களின் சதித்திட்டத்தால் 407 மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, இது தொடர்பாக திருமயம் காவல்துறையினர் உயிரிழந்த ஜகபர் அலியின் மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்து இதில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் ராசு அவரது மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், விபத்தை ஏற்படுத்தி கொலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் காசிநாதன் ஆகிய நான்கு பேரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் பெற்று புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். அதோடு, இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள குவாரி உரிமையாளர்களில் ஒருவரான ராமையாவை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில்தான், சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவினரான கரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை உதவி இயக்குனர்கள் இரண்டு பேர் மற்றும் புவியியலாளர் இரண்டு பேர் என இரண்டு குழுவினர் ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த குவாரி உரிமையாளர்கள் ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்தமான துலையானூரில் உள்ள ஆர்.ஆர் குருப்ஸூக்கு சொந்தமான கல்குவாரிகளில் ட்ரோன் உதவியுடன் கடந்த இரண்டு நாட்களாக அளவிடும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தே.மு.தி.க உள்ளிட்டக் கட்சிகள் இந்த சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. ‘இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற்று, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டும்’ என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பில் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸார் வசம் மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.