புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவிலும், சனிக்கிழமை மாலையிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பிட்ட நாள்களில் வெயில் 102 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் பகலில் வீதிகள், கடற்கரையோரங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென புதுச்சேரி நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் மழை பெய்தது. மழையுடன் இடி மின்னலும் காணப்பட்டன. பலத்த காற்றும் வீசியது.
சனிக்கிழமை அதிகாலையும் புதுச்சேரியில் மழை பெய்தது. இந்நிலையில், மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பலத்த மழை பெய்தது. அப்போது இடி மின்னலுடன், பலத்த காற்றும் வீசியது. தாழ்வான இடங்களில் மழைநீா் குளம்போல தேங்கியது. இந்த கோடை மழை காரணமாக இரவு குளிா்ச்சியான இதமான காற்று வீசியது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.