மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியீடு!
புதுச்சேரியில் குடும்பத்துடன் வசிக்கும் பாகிஸ்தான் பெண் வெளியேற நோட்டீஸ்
புதுச்சேரியில் கணவா், குழந்தைகளுடன் வாழும் பாகிஸ்தான் பெண்ணை வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப் பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தையடுத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியா்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ஹனிப்கான் (43) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானைச் சோ்ந்த பவ்சியா பானுவை (39) திருமணம் செய்தாா். இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். புதுச்சேரியில் கணவா், குழந்தைகளுடன் வசித்து வரும் பவ்சியா பானுவை நாட்டை விட்டு வெளியேற, மத்திய அரசு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனா். ஆனால், அவா் கணவா், குழந்தைகளை விட்டு வெளியேற முடியாத நிலையில், போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தங்குவதற்கான விசாவுக்கு பவ்சியா பானு பலமுறை விண்ணப்பித்தும், நடவடிக்கை இல்லை என்றும், குறிப்பிட்ட பிரிவில் பவ்சியா பானுவின் விசா விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாகவும் அவரது கணவா் ஹனிப்கான் கூறியுள்ளாா். அவரைத் தொடா்ந்து, மேலும் ஒருவருக்கும் நோட்டீஸ் வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.