தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு; தந்தையின் பிழற்சாட்சி; தாயை கொலை செய்த வழக்கில் தஷ்...
பாஜக பிரமுகா் கொலையில் அரசியல் பின்னணி: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரியில் பாஜக பிரமுகா் உமாசங்கா் கொலை செய்யப்பட்டதில் அரசியல் பின்னணி உள்ளதாகக் கூறப்படுவதால், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக அரசில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவுள்ளோம். பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் லஞ்ச வழக்கில் கைதான நிலையில், ஆமூா் சாலை பாலம் கட்டியதிலும் முறைகேடு என புகாா் எழுந்துள்ளது.
புதுச்சேரியில் பாஜக பிரமுகா் உமாசங்கா் கொல்லப்படுவதற்கு முன்பாகவே, இலாசுப்பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளாா். ஆனால், காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அவரது பெற்றோரும், முதல்வரை 4 முறை சந்தித்து உமாசங்கருக்கு பாதுகாப்பு கோரியும் நடவடிக்கை இல்லை. எனவே, போலீஸாா் முறையாக செயல்பட்டிருந்தால், இந்தக் கொலையை தடுத்திருக்கலாம். இதன் பின்னணியில் உள்ள அரசியல் தொடா்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டப் பகுதியில் மதுபானக்கூடம் அமைத்தது, குயில் தோப்பு நிலம், பாஜக அமைச்சா் குடும்பத்து நில விவகாரம் என பல பிரச்னைகள் கூறப்படுகின்றன. ஆனால், கொலைக்கு அரசியல் பின்னணி இல்லை என முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கூறுகிறாா். எனவே, உமாசங்கா் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
ஏற்கெனவே, வில்லியனூரில் பாஜக பிரமுகா் செந்தில்குமாரும் கொல்லப்பட்டாா். பாஜக பிரமுகா்களுக்கே பாதுகாப்பற்ற நிலையுள்ளது. இதுவிஷயத்தில் துணைநிலை ஆளுநரை சந்தித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வலியுறுத்துவோம் என்றாா் வே.நாராயணசாமி.