சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
புதுச்சேரியில் கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருள் விற்றதாக 9 வழக்குகள் பதிவு
புதுச்சேரியில் கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருள்களை விற்றதாக கடந்த மாா்ச் மாதம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஏப்ரல் மாதத்துக்கான ஆய்வுக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த மாா்ச் மாதம் ரயில் நிலையம், கடலோரப் பகுதிகள், கல்வி நிலையங்கள் ஆகிய பகுதிகளில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து சோதனையிடப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருள்கள் விற்றதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் புதுச்சேரியில் ஒரே மாதத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
கல்வித்துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் போதைத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது குறித்து விவரித்தனா்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் பேசுகையில், போதைத் தடுப்பு விழிப்புணா்வு நோட்டீஸ்கள் கல்வி நிலையங்கள் அருகே ஒட்டப்பட வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கும் பெட்டிக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், போதைப் பொருள் புழங்கல் குறித்து 94892 05100 என்ற கைப்பேசிக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தினாா்.