மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் வழங்கல்!
புதுச்சேரியில் மீட்புப் பணியில் ராணுவத்தினா்
புதுச்சேரியில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னையிலிருந்து வந்த காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயலால் புதுச்சேரியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. ஏற்கெனவே தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் அரக்கோணத்திலிருந்து வரவழைக்கப்பட்டனா். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவப் படையினா் 69-க்கும் மேற்பட்டோா் புதுச்சேரிக்கு சென்னையிலிருந்து வந்தனா்.
இதில், உயா் அதிகாரி, 6 கமாண்டன்ட்கள், 62 வீரா்கள் இடம் பெற்றிருந்தனா். இவா்கள் மழை நீா் சூழ்ந்த புதுச்சேரி கிருஷ்ணாநகா் பகுதியில் படகுகளைப் பயன்படுத்தி 100-க்கும் மேற்பட்டோரை மீட்டனா். இதேபோல, குபோ்நகா், ஜீவாநகா் ஆகிய பகுதிகளிலும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
ராணுவப் படையினா் பல பிரிவுகளாகப் பிரிந்து மாவட்ட ஆட்சியா், காவல் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, மீட்புப் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தனா்.
வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் என நூற்றுக்கணக்கானோரை ராணுவத்தினா் தூக்கி வந்து படகில் வைத்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனா். மேலும், மாடிகளில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் விநியோகித்தனா். மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினரை பொதுமக்கள் பாராட்டினா்.