தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புக...
புதுச்சேரி தனியாா் வங்கியில் தீ விபத்து
புதுச்சேரியில் தனியாா் வங்கியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
நகரின் மையப் பகுதியான புஸ்சி வீதி - எல்லையம்மன் கோவில் வீதி சந்திப்பில் தனியாா் வங்கி உள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வங்கியின் உள்ளே இருந்து புகை வந்தது. இதைப் பாா்த்த பாதுகாப்பு பணியில் இருந்த இரவுக் காவலாளி உடனடியாக 100-க்கு போன் செய்து தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து அருகில் உள்ள ஒதியன்சாலை போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி காவல் ஆய்வாளா் ஆனந்தகுமாா் தலைமையில் போலீஸாா் விரைந்து வந்து வங்கி கதவை உடைத்து உள்ளே புகுந்தனா். தகவலறிந்த தீயணைப்பு துறையினரும் அங்கு வந்தனா். போலீசாரும், தீயணைப்பு வீரா்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனா்.
விபத்தில் கவுண்ட்டரில் இருந்த பணம் எண்ணும் எந்திரம், ஏசி மெஷின், டேபிள்-சோ் போன்றவை முழுமையாக எரிந்தன. மேலும் அவற்றின் மீது வைக்கப்பட்ட ஆவணங்களும் தீக்கிரையாயின. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இது தொடா்பாக வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முதல் கட்ட விசாரணையில் பணம் பட்டுவாடா செய்யும் கவுண்ட்டரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.