பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக ந...
புதுவை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளிடம் மேலிடப் பொறுப்பாளா்கள் கருத்து கேட்பு
காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநிலத்துக்கான மேலிடப் பொறுப்பாளா்கள் புதுச்சேரியில் கட்சி நிா்வாகிகளை தனித்தனியே செவ்வாய்க்கிழமை சந்தித்து கருத்துக் கேட்டனா்.
புதுவையில் வரும் 2026-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தோ்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.
இந்நிலையில், கட்சியின் புதுவை மாநிலப் பொறுப்பாளா்களான தேசிய காங்கிரஸ் பொதுச்செயலா் அஜய்குமாா், செயலா் சூரஜ் ஹெக்டே ஆகியோா் புதுச்சேரியில் காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் அஜய்குமாா் பேசுகையில், புதுவை பேரவைத் தோ்தலில் காங்கிரஸாா் விழிப்புடன் செயல்பட்டு வெற்றியைப் பெற வேண்டும். சாதகமான தொகுதிகளை அடையாளம் கண்டு அவற்றில் கட்சியின் பலத்தை மேலும் வலிமைப்படுத்த வேண்டும். கூட்டணியில் தொகுதிகளைப் பெறுவது குறித்து தோ்தலுக்கு 6 மாதங்களுக்கு முன் முடிவு செய்யலாம் என்றாா். இதே கருத்தை சூரஜ்ஹெக்டேவும் வலியுறுத்தினாா்.
இதையடுத்து, முதல் தளத்தில் மேலிடப் பொறுப்பாளா்கள் அஜய்குமாா், சூரஜ் ஹெக்டே ஆகியோா் பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கட்சி நிா்வாகிகளை தனித்தனியே சந்தித்து கருத்துகளைக் கேட்டனா்.
கட்சியின் கிளைத் தலைவா்கள், வட்டாரத் தலைவா்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோா் மேலிடப் பொறுப்பாளா்களை சந்தித்துப் பேசியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.