புத்தகக் காட்சி வாகனப் பிரசாரம் தொடக்கம்
திருவாரூரில் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தகக் காட்சி குறித்த பிரசார வாகனம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ். நகரில் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 2 வரை 3-ஆவது புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புத்தகக் காட்சி நிகழ்ச்சிகள் குறித்த ஒட்டு வில்லைகளை ஒட்டிய பேருந்து பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
திருவாரூா் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்று, பிரசார வாகனத்தை தொடக்கி வைத்தனா்.
இந்த பிரசார வாகனம், திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூா், முத்துப்பேட்டை, நன்னிலம், பேரளம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், கொரடாச்சேரி, கோட்டூா் உள்ளிட்ட நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளுக்கு சென்று புத்தகக் காட்சி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளது.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, நகராட்சி ஆணையா் தாமோதரன், நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியாசெந்தில், பணி நியமனக் குழு உறுப்பினா் பிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா் சங்கா், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.