புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் புதிய மோசடி.. எச்சரிக்கும் காவல்துறை!
அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லும் செயலிக்கான ஏபிகே லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
இந்த லிங்கில் உங்கள் பெயர் மற்றும் யாருக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமோ அவரது பெயரை பதிவிட்டால், புத்தாண்டு வாழ்த்து அனுப்பலாம் என்று அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து புத்தாண்டு வாழ்த்து செயலிக்கான லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம். அதன் மூலம் உங்களது தகவல்கள் திருடப்படும் அபாயமுள்ளது என்று காவல்துறை வெளியிட்டிருக்கும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுளள்து.
இதுவரை சூழ்நிலைக்கு ஏற்ப பல மோசடிகளை சைபர் குற்றவாளிகள் அரங்கேற்றியிருக்கும் நிலையில், தற்போது புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் வரும் மோசடி குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருநெல்வேலி சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டிருக்கும் தகவலில், இணையதளத்தில் தற்போது செயல்பட்டு வரும் புத்தாண்டு வாழ்த்து செயலி (apk file) மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
மோசடி நடைபெறும் விதம் எப்படி என்றால், உங்களது வாட்ஸப் எண்ணுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு apk file அல்லது link செய்தி வரும் அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
நீங்கள் அந்த apk file-ஐ ஓபன் செய்துவிட்டால் உங்களது போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்படும். மேலும் உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை தெரிந்துகொண்டு பண மோசடி செய்து விடுவார்கள்.
எனவே வாட்ஸ்ஆப்பில் வரும் இதுபோன்று அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகளை தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை, எதிர்பாராதவிதமாக இதுபோன்ற பண மோசடிக்கு ஆளானால், சைபர் கிரைம் இணையதளமான cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறது.