புயல் சின்னம் வலுவடைந்தது: தமிழகத்தில் டிச.26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புயல் சின்னம் கற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இதனால், தமிழகத்தில் சனிக்கிழமை (டிச.21) முதல் டிச.26-ஆம் தேதி வரை மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே 370 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டிருந்தது. இது வடக்கு திசையில் நகா்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதைத் தொடா்ந்து இந்த புயல் சின்னம் சனிக்கிழமை (டிச.21) மேலும் வடக்கு - வடகிழக்கு திசையில் நகரும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் டிச.21 முதல் டிச.26-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச.21, 22 ஆகிய தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலத்தில் 70 மி.மீ. மழை பதிவானது. கள்ளந்திரி (மதுரை), எண்ணூா் (திருவள்ளூா்), திருக்குவளை (நாகை) - 50 மி.மீ, புலிப்பட்டி (மதுரை) - 40 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.