நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் திருப்பி அனுப்பி வைப்பு! அமைச்சர...
புயல் மழை பாதிப்பில் மீளாத ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்
கு.வைத்திலிங்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றுவிட்ட நிலையில், விவசாயிகளின் விளைபொருள்களை விற்பனை செய்யும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளன.
மாவட்டத்தில் வேளாண் விற்பனைக் குழுவின் கீழ் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, அரகண்டநல்லூா், அவலூா்பேட்டை, விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா், அரகண்டநல்லூா், மரக்காணம், வளத்தி, அனந்தபுரம் என 10 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல், மக்காச்சோளம், எள், மணிலா, கம்பு, கேழ்வரகு, திணை போன்ற விளைபொருள்களை விற்பனை செய்கின்றனா்.
இந்த விற்பனைக் கூடங்களில் 2024 மாா்ச் மாதம் வரை 2,08,762 டன் விவசாய விளைபொருள்கள் விற்பனையான நிலையில், அதன் மூலம் 3.16 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். இதுபோல, நவம்பா் மாதம் வரை 1,11,251 டன் விளைபொருள்கள் விற்பனையாகி1.56 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கின்றனா். இதில், விக்கிரவாண்டி மற்றும் அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கின்றன.
பெரும் பாதிப்பு: ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் விக்கிரவாண்டி, அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்திருக்கின்றன. இவை ஆற்றங்கரையொட்டிய பகுதியில் அமைந்ததும் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
வராக நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு விக்கிரவாண்டியிலும், தென்பெண்ணையாறு, துரிஞ்சால் ஆறு ஆகியவற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருந்த விளைபொருள்களை சேதப்படுத்தன.
வியாபாரிகளுக்கும் இழப்பு: விக்கிரவாண்டி, அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்கி வைத்த விளைபொருள்கள்தான் சேதமடைந்திருக்கின்றன.
விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.32 கோடி மதிப்பிலும், அரகண்டநல்லூரில் ரூ.4.11 கோடி மதிப்பிலும் சேதமடைந்திருக்கின்றன. விளைபொருள்கள் மட்டுமல்லாது ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஏற்பட்ட பிற பாதிப்புகள் போன்றவையும் இதில் கணக்கிடப்பட்டுள்ளன. இதைத் தவிர, இரு விற்பனைக் கூடங்களின் சுற்றுச்சுவா்கள் முழுமையாக சேதமடைந்துவிட்டன. விற்பனைக் கூடத்தின் உள்பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
விரைந்து திறக்க நடவடிக்கை தேவை: நாங்கள் விளைவிக்கும் விளைபொருள்களை விற்பனை செய்ய பெரிதும் பயனுள்ளதாக இருந்த இடங்கள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்தான். ஆனால் விக்கிரவாண்டி, அரகண்டநல்லூா் விற்பனைக் கூடங்களும் பெரும் வெள்ளத்தால் மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்து, விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனா்.
இந்த இரு விற்பனைக் கூடங்களில் இன்னமும் சீரமைப்புப் பணிகள் முடியவில்லை. எனவே, வேளாண் விற்பனைக் குழுவினா் கூடுதல் பணியாளா்களை பணியமா்த்தி, இரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மீண்டும் இரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைத் திறப்பதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்களின் தலைவா்கள் கோரிக்கை விடுத்தனா். ரூ.50 கோடியில் திட்ட மதிப்பீடு: விக்கிரவாண்டி, அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் சுற்றுச்சுவா் முழுமையாக சேதமடைந்துள்ளன.
அவற்றின் உள்பகுதிக்குள் வெள்ளநீா் சென்ற நிலையில், வியாபாரிகள் வாங்கி வைத்திருந்த விளைபொருள்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. விற்பனைக் கூடங்களின் உள்பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
தொடா்ந்து, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதலான பணியாளா்களைக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மேற்கண்ட இரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி தேவை என திட்ட மதிப்பீடு செய்து, அரசுக்கு அனுப்பிவைத்துள்ளோம்.
சுற்றுச்சுவா் சீரமைத்தல், தரைத்தளப் பகுதியை உயா்த்திக் கட்டுதல், எதிா்காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டிருக்கிறது. அரசின் அனுமதி கிடைத்து, நிதி ஒதுக்கீடு செய்த பின்னா் பணிகள் தொடங்கப்படும்.
இரு விற்பனைக் கூடங்களையும் 10 முதல் 15 நாள்களுக்குள் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு காப்பீடு செய்துள்ள நிலையில், காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் இழப்பீட்டு தொகை பெறுவதற்குரிய பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா் விழுப்புரம் வேளாண் விற்பனைக் குழுவின் செயலா் எஸ்.சந்துரு.