கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை!! ஊத்தங்கரையில் 503 மி.மீ. பதிவு!
புயல் மீட்பு பணிக்குச் சென்ற லாரி சாலைத் தடுப்பில் மோதி மதுரை மாநகராட்சிப் பொறியாளா் பலி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புயல் மீட்புப் பணிக்கு சென்றுகொண்டிருந்த லாரி ஞாயிற்றுக்கிழமை இரவு விபத்துக்குள்ளானதில் மதுரை மாநகராட்சிப் பொறியாளா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், விளாச்சேரியை அடுத்த ஆதிசிவன் நகரில் வசித்து வந்தவா் சந்தானராஜ் மகன் ரமேஷ்பாபு (55). இவா், மதுரை மாநகராட்சியில் இளநிலைப் பொறியாளாராகப் பணியாற்றி வந்துள்ளாா்.
இந்நிலையில், ஃபென்ஜால் புயல் மீட்பு பணிக்காக, மதுரையிலிருந்து ஒரு லாரியில் ஜெனரேட்டா், மின் மோட்டாா் மற்றும் குழாய்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கிப் புறப்பட்டுள்ளாா். லாரியை மதுரை ஆலம்பட்டியைச் சோ்ந்த பிச்சை மகன் கற்பகராஜா ஓட்டியுள்ளாா்.
லாரி, மணப்பாறைக்கு முன்னதாக திருச்சி - மதுரை தேசியநெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கோவில்பட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.
இதில் லாரியின் அடியில் சிக்கிய பொறியாளா் ரமேஷ்பாபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கற்பகராஜா காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, ரமேஷ்பாபு உடலை மீட்டு கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வளநாடு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.