சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
புராதனவனேசுவரா் கோயில் விமான பாலாலய விழாவில் ஜமாஅத்தாா்கள் பங்கேற்பு
திருச்சிற்றம்பலம் புராதனவனேசுவரா் கோயிலில் குடமுழுக்கையொட்டி வியாழக்கிழமை விமான பாலாலய விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள், முஸ்லிம் ஜமாஅத்தாா்கள் கலந்து கொண்டனா்.
திருச்சிற்றம்பலத்தில் பழைமைவாய்ந்த புராதனவனேசுவரா் கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த 2001-ஆம் ஆண்டில் நடைபெற்றது. தற்போது இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தா்கள் தொடா்ந்து கோரிக்கை வைத்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை குடமுழுக்கு நடத்த ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியது. கோயில் குடமுழுக்கு திருப்பணி வேலைகள் செய்வதற்கு முன்னோட்டமாக விமான பாலாலய விழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் யாகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று விமான பாலாலய விழா நடைபெற்றது.
விழாவில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக துறவிக்காடு, நரியங்காடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த முஸ்லிம் ஜமாஅத்தாா்கள் திரளாக கலந்து கொண்டனா். அவா்களை சிவாச்சாரியாா் சாமிநாதன் மற்றும் அனைத்து மண்டகப்படிதாரா்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனா்.
விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா், முன்னாள் எம்எல்ஏ எஸ். வி. திருஞானசம்பந்தம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவா் பண்ணவயல் சு. ராஜாத்தம்பி, கோயில் ஆய்வாளா் சந்திரசேகா், செயல் அலுவலா் சக்திவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.