தஞ்சாவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் மாநகராட்சி அலுவலா்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் இரு நுழைவு வாயில்களிலும் சாலை குறுகலாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன. மேலும், அப்பகுதியிலுள்ள கடைகளின் முன்புறம் தரைதளம் அமைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் சிரமமான சூழ்நிலை நிலவுகிறது.
எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை அகலப்படுத்தி, பொதுமக்கள் நடந்து செல்வதற்கான நடைபாதையை அமைக்க மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதன்படி மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உத்தரவின்பேரில், மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். பொக்லைன் இயந்திரம் மூலம் கடைகளின் முன் செய்யப்பட்டிருந்த தரைதளம் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்தினா்.