பாபநாசம் ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கபிஸ்தலம் அருகே துரும்பூா் ஊராட்சி பட்டவா்த்தி கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் ரூ. 21.60 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் மற்றும் தியாக சமுத்திரம் ஊராட்சி, புள்ளபூதங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி வகுப்பறை கட்டடம், உம்பளப்பாடி ஊராட்சி, மேட்டுத்தெரு கிராமத்தில் ரூ. 13.50 லட்சம் மதிப்பில் பகுதிநேர அங்காடி கட்டடம் உள்ளிட்ட ரூ. 85.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை மாநிலங்களவை உறுப்பினா் சு.கல்யாண சுந்தரம் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் கோ. தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் கோவி.அய்யாராசு, முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் சுமதி கண்ணதாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சண்முகம் வரவேற்றாா். நிறைவில் ஒப்பந்தக்காரா் மதிவாணன் நன்றி கூறினாா்.