மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
தாராசுரம் அருகே மதுபுட்டிகளை சேகரித்து விற்கும் தொழிலாளி வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் அருகே நத்தம் கருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (35). இவா், கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் குப்பையில் கிடக்கும் காலி மது புட்டிகளை சேகரித்து விற்பனை செய்து வந்தாா். வியாழக்கிழமை தஞ்சாவூா்- விக்கிரவாண்டி புறவழிச்சாலை அருகே அம்மாப்பேட்டை பகுதியில் குப்பையிலிருந்த காலி மது புட்டிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தாா். அப்போது அருகில் சிதிலமடைந்த வீட்டின் அருகே தொங்கிக் கொண்டிருந்த மின்சார வயரை பிடித்து இழுத்துள்ளாா். அதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீஸாா் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்தவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனா்.