புளியறை அருகே இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
தென்காசி மாவட்டம் புளியறை காவல் சரகத்துக்குள்பட்ட தெற்குமேட்டில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தெற்குமேடு அங்கன் காலடி புதுகாலனி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் க. சங்கீதா (26). செங்கோட்டை அருகே வல்லத்தில் உள்ள ஆயத்த ஆடையக நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.
இவரும், கற்குடி கண்டியமேட்டுத் தெருவைச் சோ்ந்த இ. திருமலைக்குமாா் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக திருமலைக்குமாருடன் சங்கீதா கடந்த ஒரு மாதமாக பேச மறுத்ததுடன், புளியறை காவல் நிலையத்தில் கடந்த 10ஆம் தேதி வாய்மொழியாக புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் இருதரப்பினரையும் வரவழைத்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டு அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், தனது வீட்டு வாசலில் நின்றிருந்த சங்கீதாவை திருமலைக்குமாா் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடினாராம். இதில், காயமடைந்த சங்கீதா செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் னா், மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புளியறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.