Virginia Giuffre: இளவரசர் மீது பாலியல் வன்கொடுமை புகார் - குற்றச்சாட்டு கூறியப் ...
புள்ளம்பாடி, பொன்னாறு வாய்க்கால்களை தூா்வார வேண்டும்: குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
\ புள்ளம்பாடி, பொன்னாறு வாய்க்கால்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று பேசியது:
என். செங்கமுத்து (அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா்): ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனை செய்யும் விளை பொருள்களுக்கு ஓரிரு நாளில் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரிசை எண் அடிப்படையில் நில அளவையா்கள் கையூட்டு பெறாமல் விவசாயிகளுக்கு உடனடியாக நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும்.
தூத்தூா் தங்க.தா்மராஜன் (காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்): தமிழக அரசிடமிருந்து சிறப்பு நிதி பெற்று, புள்ளம்பாடி மற்றும் பொன்னாறு ஆகிய வாய்க்கால்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதையாற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும். ஆற்றில் உள்ள வண்டல் மண்களை அள்ளிக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
சுக்கிரன் ஏரியின் பாசன பகுதியான சிலுப்பனூா், நானாங்கூா், ஓரியூா், கோமான் ஆகிய கிராமங்களை டெல்டா பாசன பகுதியில் இணைக்க வேண்டும்.
வாரணவாசி ராஜேந்திரன்: கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள அனைத்து மானியங்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரீபுரந்தான் பாண்டியன் (தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்): சுக்கிரன் ஏரியின் கடைமடை வாய்க்கால் பகுதிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
செந்தில், விஸ்வநாதன்: அரியலூா் மாவட்டத்தில் வண்டல் மண் வெட்ட அனுமதி அளிக்கும் போது இதுவரை வெட்டப்படாத ஏரி,குளங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
விளைப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றி, குரங்கு, மயில் உள்ளிட்ட பாதிப்புகளை எங்கு முறையிட வேண்டும் என்பதனை விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, வேளாண்மை இணை இயக்குநா் கீதா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக இக்கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பஹல்காம் தாக்குதலில் உயரிழந்தவா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.