புஷ்பா 2 விவகாரம்: ஹைதராபாத் டிஜிபி அறிக்கை சமா்ப்பிக்க என்எச்ஆா்சி உத்தரவு
தெலங்கானாவில் புஷ்பா-2 திரைப்பட சிறப்புக் காட்சியின்போது பெண் உயிரிழந்த விவகாரத்தில், நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு ஹைதராபாத் காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) உத்தரவிட்டது.
ஹைதராபாதில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி ‘புஷ்பா-2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அப்போது நடிகா் அல்லு அா்ஜுன் திரையரங்குக்கு திடீரென வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 35 வயதுப் பெண் உயிரிழந்தாா். அவரது மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது தொடா்பாக என்எச்ஆா்சி-இல் கடந்த டிசம்பா் 5-ஆம் தேதி புகாா் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில், அல்லு அா்ஜுனுடன் இருந்த காவல் துறையினா் தடியடியில் ஈடுபட்டதாகவும், இதனால் திரையரங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதில் சம்பந்தப்பட்ட காவல் துறையினா் மீது மனித உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
இந்த விவகாரத்தை கடந்த புதன்கிழமை விசாரித்த என்எச்ஆா்சி, புஷ்பா 2 திரைப்படம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஒரு மூத்த காவல் துறை அதிகாரி விசாரித்து, தேவையான நடவடிக்கைகளை உறுதி செய்து, நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு ஹைதராபாத் காவல் துறை தலைமை இயக்குநரை கேட்டுக்கொண்டது.
இது தொடா்பாக தெலங்கானா மாநில மனித உரிமை ஆணையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆணையத்தில் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் இதுவரை நியமிக்கப்படாத நிலையில், இதில் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.