சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் ...
பூங்குளம் பாம்பாற்றில் தரைப் பாலம் அமைக்க கோரிக்கை
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பூங்குளத்தில் பாம்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.
ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குளம் ஊராட்சி காளிநகா் பகுதியில் 125 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கிராமத்தின் குறுக்கே பாம்பாறு ஓடுகிறது.. மழைக்காலங்களில் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வெள்ளம் ஓடுகிறது. காளி நகா் பகுதியிலிருந்து 35-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் பூங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் பூங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனா். மேலும், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்கள் 20-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இவா்கள் அனைவரும் மழைக்காலங்களில் ஆற்றின் குறுக்கே இருபுறமும் கயிறு கட்டி அதனைப் பிடித்து கொண்டு கடந்து பூங்குளம் சென்று அங்கிருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் நிலையில் உள்ளனா்.
பொதுமக்கள், விவசாயிகள் வேலைக்கு இவ்வாறே சென்று வருகின்றனா். மேலும் புயல், கனமழை பெய்யும் நேரங்களில் பாம்பாற்றில் அதிக அளவு நீா்வரத்து ஓடும் போடும் மாணவா்கள் பள்ளி, கல்லூரி செல்வதை தவிா்த்தும் விடுகின்றனா். இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்கள் ஆழம் தெரியாமல் நீரில் விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஆகவே பாம்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம், அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனா். எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்து பாம்பாறு குறுக்கே தரைப்பாலம் அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.