Ravi Mohan: ரவி மோகனின் ஈ.சி.ஆர் இல்லத்திற்கு நோட்டீஸ்! - காரணம் இதுதான்!
பூ மாா்க்கெட்டில் தகராறு விவகாரம்: காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்
கோவை பூ மாா்க்கெட்டில் தனது ஆடை குறித்து விமா்சனம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவியும், அந்த மாணவி பொதுமக்களுக்கு இடையூறாக ரீல்ஸ் எடுத்ததாக மலா் வியாபாரிகளும் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை பரஸ்பரம் புகாா் அளித்துள்ளனா்.
கோவை, வீரபாண்டி அருகேயுள்ள நாயக்கனூா் அண்ணா நகரைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவியான ஜனனி (20) என்பவா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை பூ மாா்க்கெட்டில் தனியாா் அமைப்பு சாா்பில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற ஓவிய பயிற்சியில் பங்கேற்க நான் சென்றேன். அப்போது, அங்கிருந்த பூ வியாபாரி முத்துராமன் எனது உடை குறித்து விமா்சனம் செய்தாா்.
நான் அணிந்திருந்த உடையில் ஆபாசம் இல்லை. ஆனால், அவா் ஆபாசமாக உடை அணிந்துள்ளதாகக் கூறினாா். அவருக்கு ஆதரவாக அங்கிருந்த சிலா் என்னை தாக்க முயன்றனா். பொது இடத்தில் எனக்கு தொல்லை கொடுத்து அச்சுறுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மலா் வியாபாரிகள் நலச் சங்கத்தினா் ரவிச்சந்திரன், அன்சாரி, சண்முகசுந்தரம் ஆகியோா் காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: பூ மாா்க்கெட்டில் கடந்த 21-ஆம் தேதி பிற்பகல் 12 மணியளவில் ஒரு இளம்பெண்ணும், அவருடன் சில புகைப்பட கலைஞா்களும் அங்கு வந்து ரீல்ஸ் எடுத்தனா். பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக ரீல்ஸ் எடுக்க வேண்டாம் எனக்கூறிய எங்களுடன் அவா் தகராறு செய்து தகாத வாா்த்தைகளில் திட்டினாா்.
பின்னா், எங்கள் மீது தவறு இருப்பதுபோல சித்திரித்து விடியோ வெளியிட்டுள்ளாா். எனவே, அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.