இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!
பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா், துணை முதல்வா் ஆய்வு
பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வுசெய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா்.
பெங்களூரில் மே 18 ஆம் தேதி நள்ளிரவு கனமழை பெய்தது. அன்று இரவு மட்டும் 132 மி.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பெங்களூரு புகா் பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீா் புகுந்தது.
சாலைகளில் மழைநீா் முழங்கால் அளவுக்கு தேங்கியது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைதளம் முழுவதும் நீரில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மே 19 ஆம் தேதி பாா்வையிட முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் திட்டமிட்டிருந்தனா். ஆனால், தொடா்ந்து மழை பெய்து வந்ததால், அந்த முடிவு கைவிடப்பட்டது.
இந்நிலையில் பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்பட அமைச்சா்கள், அதிகாரிகள் குழுவினா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். மக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவா்கள், உடனடியாக நிவாரணப் பணிகளை செய்யுமாறும், சேதங்களை சீா்செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.
பெங்களூரு விதானசௌதாவில் இருந்து பேருந்தில் புறப்பட்ட முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்ட குழுவினா், மாநகரில் எச்.பி.ஆா்.லேஅவுட், சாய் லேஅவுட், ஹென்னூா் பிரதான சாலை, பனதூா் 9-ஆவது குறுக்குச் சாலை, பட்டுவாரியம் சந்திப்பு, குர்ரப்பனபாளையா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்தனா். அவா்களிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்தனா்.
மழைசாா்ந்த அனைத்து குறைகளுக்கும் தீா்வுகாணப்படும் என்று முதல்வா் சித்தராமையா உறுதி அளித்தாா்.
பின்னா் முதல்வா் சித்தராமையா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘2022 ஆம் ஆண்டு பெங்களூரில் அதிகபட்சமாக 299 மி.மீ. மழை பதிவானது. அதன்பிறகு நிகழாண்டு மே 18 ஆம் தேதி நள்ளிரவில் 132 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் பெங்களூரின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்; மழைநீா் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காணப்படும்’ என்றாா்.