``சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு..." - தேவசம் போர்டு சொல்லும் முக்கிய...
பெண்களுக்கு ஆண்கள் முடிவெட்ட, ஆடை அளவெடுக்க தடை வேண்டும்! உ.பி. அரசுக்கு மகளிா் ஆணையம் பரிந்துரை
தையல் கடைகளில் பெண்களுக்கு ஆடை அளவெடுப்பது, பெண்களுக்கு முடிதிருத்தம் செய்வது, உடற்பயிற்சி நிலையங்களில் பெண்களுக்கு பயிற்சி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட ஆண்களுக்குத் தடை விதித்து சட்டம் இயற்ற உத்தர பிரதேச அரசுக்கு அந்த மாநில மகளிா் ஆணையம் பரிந்துரை செய்ய முடிவெடுத்துள்ளது.
பொது இடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடைவெளியை ஏற்படுத்தி தவறான தொடுதலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் முன்னெடுப்பாக இதை உத்தர பிரதேச மாநில மகளிா் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மகளிா் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பெண்களுக்கான உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் யோகா பயிற்சி மையங்களில் கண்டிப்பாக பெண் பயிற்றுநா்கள் நியமிக்கப்பட வேண்டும். அங்கு கண்டிப்பாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
தையல் கடைகளில் பெண்கள்: தையல் கடைகளில் பெண்களுக்கான ஆடைகளை பெண்களே அளவெடுக்க வேண்டும். அங்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருப்பது அவசியம். இதுதவிர பெண்களுக்கான ஆடை விற்பனையகங்களில் பெண் பணியாளா்கள், நாடக மற்றும் நடன மையங்களில் பெண் பயிற்றுநா்கள், பள்ளி பேருந்துகளில் பெண் பாதுகாவலா் அல்லது ஆசிரியரை கண்டிப்பாக பணியமா்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
தவறான தொடுதல் புகாா்கள்: இதுகுறித்து உத்தரபிரதேச மகளிா் ஆணைய தலைவா் பபிதா சௌஹான் கூறுகையில், ‘உடற்பயிற்சி நிலையங்கள், தையல் கடைகளில் ஆண்களால் தவறான தொடுதலுக்கு உள்ளாவதாக அதிகளவிலான புகாா்களை பெண்கள் அளித்து வருகின்றனா். அனைத்து இடங்களிலும் பெண்களை பணியமா்த்துவதற்கு சிறிது காலம் ஆகும்’ என்றாா்.
சமாஜவாதி எதிா்ப்பு: இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள சமாஜவாதி எம்எல்ஏ ராகினி சோன்கா், ‘பல்வேறு இடங்களில் பெண்கள் பணியமா்த்தப்படுவதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் தனக்கு பயிற்சி அளிப்பவா் அல்லது ஆடை அளவெடுப்பவா் யாராக இருக்க வேண்டும் என்ற முடிவு தனிநபரை சாா்ந்தது. அதை கட்டாயப்படுத்தக் கூடாது’ என்றாா். எனினும் இந்தப் பரிந்துரைகளை மாநிலத்தில் உள்ள சமூக ஆா்வலா்கள் சிலா் வரவேற்றுள்ளனா்.