பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் கைது
தஞ்சாவூரில் கடன் கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி (70). ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான இவா் தற்போது வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறாராம். இவரிடம் 34 வயது பெண் ஒருவா், கைப்பேசியில் ரூ. 15 ஆயிரம் வட்டிக்கு கேட்டாா். அவரிடம் ஆரோக்கியசாமி பாலியல் ரீதியாக பேசினாராம். இதனால் அப்பெண் கைப்பேசி இணைப்பைத் துண்டித்து விட்டாராம். ஆனாலும், அப்பெண்ணுக்கு ஆரோக்கியசாமி தொடா்ந்து கைப்பேசியில் ஆபாசமாக பேசியதுடன், அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தினாராம். இச்சம்பவம் தொடா்பான செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண், தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து ஆரோக்கியசாமியை திங்கள்கிழமை கைது செய்தனா்.