பெண்ணை எரித்துக் கொன்ற நபர்: லிவ்இன் உறவில் வாழ்ந்த பெண்ணை வேறு நபருடன் பார்த்ததால் வெறிச்செயல்!
பெங்களூருவில் உள்ள ஹுலிமாவு ரோட்டில் வனஜாக்ஷி(25) என்ற பெண் தனது ஆண் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்த நபர் தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டே வந்தார்.
காரில் பெட்ரோல் ஊற்றிய காதலன்
வனஜாக்ஷியுடன் காரில் வந்த அவரது ஆண் நண்பர் முனியப்பா போக்குவரத்து நெருக்கடி காரண்மாக காரை நிறுத்தினார். உடனே பின்னால் வந்த காரில் இருந்து இறங்கிய வித்தல்(55) என்பவர் பெட்ரோல் கேனுடன் வந்தார். அவர் முனியப்பாவின் காரில் இருந்த வனஜாக்ஷி மீது பெட்ரோலை ஊற்றினார். உடனே முனியப்பா காரில் இருந்து இறங்கும்படி வனஜாக்ஷியிடம் கேட்டுக்கொண்டார். வனஜாக்ஷியும் காரில் இருந்து இறங்கினார்.

அவர் காரில் இருந்து இறங்கி ஓட ஆரம்பித்தார். ஆனால் கால் தவறி கீழே விழுந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு வனஜாக்ஷி மீது வித்தல் தனது லைட்டரால் தீயை பற்ற வைத்துவிட்டார்.
நடுரோட்டில் வனஜாக்ஷி தீயுடன் அலறியடித்தபடி ஓடிய காட்சி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அவரது உடம்பில் இருந்த தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஒரு நாள் முழுக்க சிகிச்சையளித்து வந்த நிலையில் வனஜாக்ஷி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வித்தலை கைது செய்துள்ளனர்.
லின் இன் உறவு
போலீஸாரின் விசாரணையில் வித்தல் ஏற்கனவே மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். வனஜாக்ஷி தன்னை விட இரண்டு மடங்கு வயது அதிகமான மது என்பவரை திருமணம் செய்து கொண்டார். மதுவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த போது வனஜாக்ஷிக்கு வித்தலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அத்தொடர்பு காரணமாக அவர்கள் இரண்டு பேரும் சில ஆண்டுகள் லிவ் இன் உறவில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் வித்தல் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து சித்ரவதை செய்ததால் அவரிடமிருந்து வனஜாக்ஷி விலகிவிட்டார். அவரது கணவரும் இறந்துவிட்டார்.
அதன் பிறகு வனஜாக்ஷிக்கு தொழிலதிபர் முனியப்பா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்பு அவர்களிடையே நெருக்கத்தை ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சுற்ற ஆரம்பித்தனர். வனஜாக்ஷிக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவனை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். அவனை பார்ப்பதற்காக வனஜாக்ஷி தனது ஆண் நண்பருடன் காரில் சென்ற போதுதான் இச்சம்பவம் நடந்தது. அவர்கள் இரண்டு பேரும் காரில் செல்வதை கண்காணித்து அவர்கள் பின்னாடியே மற்றொரு காரில் வந்த வித்தல் கார் நின்றவுடன் வனஜாக்ஷியை தீவைத்து எரித்துள்ளார்.
நடுரோட்டில் அனைவர் முன்னிலையில் பெண் எரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வித்தல் பெட்ரோலை எடுத்து வனஜாக்ஷி மீது ஊற்றியபோது அவரிடமிருந்து பெட்ரோல் கேனை பிடுங்க சிலர் முயன்றனர். ஆனால் அதனையும் மீறி பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார். இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் நாராயணா கூறுகையில்,'' குற்றவாளி 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுவிட்டார். காயம் அடைந்த பெண்ணை காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் முடியாமல் போய்விட்டது'' என்று தெரிவித்தார்.