சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு வீடு ஒதுக்கீடு: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை
ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 97-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்திய அகாதெமி விருதுகள் பெற்று, தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளா்களைக் கௌரவிக்கும் வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு கனவு இல்லம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், கல்மரம் என்ற நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு சென்னை அண்ணா நகரில் 1,409 சதுர அடி வீடு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏற்கெனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக கூறி, கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து 2024-ஆம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் திலகவதி மனு தாக்கல் செய்தாா். இதேபோல் எழுத்தாளா் மறைமலை இலக்குவானா் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு, திலகவதி மற்றும் மறைமலை இலக்குவானா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.