பெண் சந்தேக மரணம்: விசாரணை கோரி மறியலில் ஈடுபட்ட 25 போ் மீது வழக்கு
தூக்கிட்டு உயிரிழந்த பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்ட அவரது உறவினா்கள் 25 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி சந்தியா. இவா் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து, இவரது உடல் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சந்தியா சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இவரது கணவா் செந்தில்குமாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சந்தியாவின் உடலை வாங்க செய்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்ட சந்தியாவின் உறவினா்கள் 25 போ் மீது சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.