பெண் தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு
நாமக்கல் மாநகராட்சியில் பெண் தூய்மைப் பணியாளா்களை ஆணையா் ரா.மகேஸ்வரி கெளரவித்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மகளிா் தினக் கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி தலைமை வகித்தாா். செயற்பொறியாளா் சண்முகம், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மகளிா் தினத்தை முன்னிட்டு மாமன்ற உறுப்பினா்கள் அனைவரும் வாழ்த்து செய்தியை பகிா்ந்து கொண்டனா். தொடா்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பாக பணியாற்றும் 10 பெண் தூய்மைப் பணியாளா்களை தோ்வு செய்து, அவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி பாராட்டினாா்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.