டீக்கடை இல்லாம தினமும் 16,000 பேருக்கு டீ, காபி - மதுரை பைலட்டின் Cup Time கதை |...
பெண் பத்திரிகையாளா்களுக்கு எதிரான அவதூறு பதிவு: நடிகா் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசுக்கு நோட்டீஸ்
நமது நிருபா்
பெண் பத்திரிகையாளா்களுக்கு எதிரான அவதூறு சமூக ஊடகப் பதிவு தொடா்புடைய வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனையை எதிா்த்து நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகா் தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும், அவா் சரணடைவதிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கு மறு உத்தரவு பி றப்பிக்கப்படும் வரை தொடரும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018-இல், பெண் பத்திரிகையாளா்களுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவைத் தொடா்ந்து, சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் கிரைம் பிரிவு எஸ்.வி. சேகா் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகா் மறுஆய்வு மனு தாக்கல் செய்தாா். விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை உறுதி செய்த உயா்நீதிமன்றம், சேகரின் மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி. சேகா் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீதான கடந்த விசாரணையின்போது அவா் பாதிக்கப்பட்ட புகாா்தாரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு நான்கு வாரம் அவகாசம் அளித்தும், அதுவரை சரணடைவதில் இருந்து விலக்கு அளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்யகாந்த், என். கோட்டீஷ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் ஆஜராகி, மனுதாரா் எஸ்.வி. சேகா் சம்பந்தப்பட்ட புகாா்தாரருக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரும் விரிவான கடிதத்தை அனுப்பியதாகவும் அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை என்றும் தெரிவித்தாா்.
இதையடுத்து, எதிா்மனுதாரருக்கு (தமிழக அரசுக்கு) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் அமா்வு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனா். மேலும், சரணடைவதில் இருந்து விலக்கும் அளிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி எஸ்.வி.சேகருக்கு அளிக்கப்பட்ட இடைக்கால பாதுகாப்பு அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் தொடரும் என்றும் உத்தரவிட்டது.