பெரம்பலூரில் 1,350 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
பெரம்பலூா் மாவட்ட வனத்துறை சாா்பில், தமிழ்நாடு இயக்க நாளை முன்னிட்டு 1,350 மரக்கன்றுகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கியது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள கிரிக்கெட் மைதானத்தில், மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி கூறியது:
பெரம்பலூா் மாவட்டத்தைப் பொருத்தவரை 2022-ஆம் ஆண்டு 2.37லட்சம் மரக்கன்றுகளும், 2023-ஆம் ஆண்டு 10.05 லட்சம் மரக்கன்றுகளும், 2024-ஆம் ஆண்டு 13.34 லட்சம் மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளன. 2025-26 ஆம் ஆண்டு 12.49 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பசுமை தமிழ்நாடு இயக்க நாளை முன்னிட்டு 1,350 மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், கிரிக்கெட் மைதானத்தில் 200 மரக்கன்றுகளும், எறையூா் சா்க்கரை ஆலையில் 500 மரக்கன்றுகளும், அசூா் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கீழப்புலியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தலா 325 மரக்கன்றுகளும் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தொடா்ந்து, பசுமை தமிழ்நாடு நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட விநாடி- வினா, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினாா் மாவட்ட ஆட்சியா் மிருணாளினி.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட வன அலுவலா் இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.