பேனா தினம்: சட்டையில் எழுதி கொண்டாடிய மாணவிகள்; சட்டையை கழற்றி, வீட்டுக்கு அனுப்பிய பள்ளி முதல்வர்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாட் மாவட்டத்தில் இருக்கும் திக்வாதி என்ற இடத்தில் இருக்கும் பள்ளியில் மாணவர்கள் பேனா தினத்தை கொண்டாடினர். இதற்கு பள்ளி முதல்வர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவரது எதிர்ப்பை மீறி பேனா தினத்தை கொண்டாடிய மாணவிகள் ஒருவருக்கொருவர் மற்றவர்கள் சட்டையில் எதாவது வாசகத்தை எழுதினர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவிகளை அழைத்து பள்ளி முதல்வர் கண்டித்தார். அதோடு சட்டையில் எழுதிய மாணவிகளை அவர்களிடம் சட்டையை கழற்றும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் மாணவிகள் தங்களை மன்னிக்கும்படி முதல்வரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் பள்ளி முதல்வர் அவர்களது மன்னிப்பை ஏற்காமல் அவர்களை சட்டையை கழற்றிவிட்டு, பிளேசருடன் வீட்டுக்குச் செல்லும்படி படி தெரிவித்துள்ளார். இதனால் 10 வது வகுப்பு படிக்கும் 60 மாணவிகள் மேல் சட்டையை கழற்றிவிட்டு அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீட்டிற்கு வந்த மாணவிகள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் புகார் செய்தனர். இதனால் கோபம் அடைந்த பெற்றோர் இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் மாத்வி மிஸ்ராவிடம் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறை அதிகாரி மிஸ்ரா கூறுகையில்,'' பல பெற்றோர்கள் பள்ளி முதல்வருக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலரிடமும் இது தொடர்பாக வாக்குமூலம் வாங்கி இருக்கிறோம். இப்புகார் குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. கமிட்டியின் விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
புகார் செய்ய சென்ற பெற்றோருடன் ஜரியா தொகுதி எம்.எல்.ஏ ராகினி சிங்கும் உடன் சென்று இருந்தார். பள்ளியில் நடந்த சம்பவம் வெட்கக்கேடாது என்றும், துரதிஷ்டவசமானது என்றும் ராகினி தெரிவித்தார்.