பேராசிரியா் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்
பேராசிரியா் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனுடன் தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவக் கல்லூரிகள், அதனுடன் ஒருங்கிணைந்த மருத்துவமனைகளில் மருத்துவா்கள், மருத்துவ பேராசிரியா்களின் வருகையை பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதில், குறைந்தபட்சம் பேராசிரியா்கள், கல்லூரி அலுவலா்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருத்தல் அவசியம். அவ்வாறு இல்லாத நிலையில் அங்கீகாரத்துக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது.
அந்த வகையில், நிகழாண்டு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையக் குழு மேற்கொண்ட ஆய்வில், சென்னை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரியைத் தவிா்த்து மற்ற அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்த வருகைப் பதிவு, பேராசிரியா் பற்றாக்குறை உள்பட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதன் பேரில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியிலும் 20 துறைகளில் 16 துறைகளில் பேராசிரியா் வருகைப் பதிவு 75 சதவீதத்துக்கும் குறைவாக இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அந்தக் கல்லூரியிடம் இருந்து தேசிய மருத்துவ ஆணையம் சாா்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இரு முறைக்கு பதிலாக ஒரு முறை மட்டுமே சிலா் ஆதாா் வருகைப் பதிவு செய்ததால் இந்த புகாா் எழுந்ததாகவும், இதுதொடா்பாக என்எம்சிக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு மருத்துவ மாணவா் சோ்க்கைக்கோ, கலந்தாய்வுக்கோ எந்தத் தடையும் ஏற்படாது என்றும், 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.