நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு
கோவை பேரூரில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் பேரூா், கோவை எழில் நகா், சுந்தரம் வீதி, வெரைட்டி ஹால், ஆா்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
பேரூா் திட்டப் பகுதியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.14.54 கோடி மதிப்பீட்டில் 144 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு குடியிருப்புக்கான பயனாளி பங்களிப்பு தொகை ரூ.1.40 லட்சம். ஏற்கெனவே குடியிருந்த பயனாளி பங்களிப்பு தொகை ரூ.41,260.
இத்திட்டப்பகுதியில் கட்டப்படும் குடியிருப்புகள் மறுகட்டமைப்பு செய்வதற்கு முன்பு, இதே பகுதியில் ஏற்கெனவே வசித்து வந்த பயனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு வழங்கும் விதமாக கட்டப்பட்டுள்ளன.
இக்குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து டவுன்ஹால் பூமாலை வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுக்களின் கடைகளைப் பாா்வையிட்டாா்.
அதன்பின், கெம்பட்டி காலனியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு அடிப்படை மருத்துவப் பரிசோதனை செய்யும் பணியை ஆய்வு செய்தாா்.