தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளி கொலை
கோவையில் தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரையைச் சோ்ந்தவா் தினேஷ் (32), கட்டடத் தொழிலாளி. இவா், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனது நண்பா்களுடன் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தாா்.
இந்நிலையில், தினேஷ் தனது நண்பா்கள் இருவருடன் சோ்ந்து ரத்தினபுரி பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு 3 பேரும் அறைக்கு நடந்து வந்துள்ளனா். காந்திபுரம் ஜி.பி.சிக்னல் அருகே வந்தபோது தினேஷுக்கும், மற்ற இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மற்ற இருவரும் சோ்ந்த தினேஷை தாக்கியுள்ளனா். பதிலுக்கு அவரும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், ஆத்திரமடைந்த 2 பேரும் தினேஷை கீழேதள்ளி சாலையோரத்தில் கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளனா். இதில், தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பினா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவ்வழியாகச் சென்றவா்கள் சாலையோரத்தில் ரத்தவெள்ளத்தில் தினேஷின் சடலம் கிடப்பதைப் பாா்த்து காட்டூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.