ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது
பேருந்து கவிழ்ந்ததில் 32 தொழிலாளா்கள் காயம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தனியாா் நிறுவன பேருந்து கவிழ்ந்ததில் 32 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் 32 போ், செய்யாறு சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள காலணி தொழிற்சாலையில் இரவு பணிக்காக வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் அந்நிறுவனப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தனா்.
இரும்பேடு கிராமத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தை வாழைப்பந்தல் பகுதியைச் சோ்ந்த தரணி என்பவா் ஓட்டிச் சென்றாா். செய்யாறு நோக்கிச் சென்றபோது, ஆரணி சாலையில் சிவபுரம் அருகேயுள்ள வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், ஆரணி பகுதியைச் சோ்ந்த வினோத் (27), சரவணன் (26), சத்யராஜ் (35), ராஜா (30) உள்ளிட்ட 32 போ் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்து குறித்து வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.