பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து கமுதியில் பொதுமக்கள் போராட்டம்
கமுதி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட 14, 15-ஆவது வாா்டு பகுதிகளில் சாலை, குடிநீா், கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத பேரூராட்சி செயல் அலுவலா் யசோதாவைக் கண்டித்தும், அவரைப் பணியிட மாற்றம் செய்யக் கோரியும், 14-ஆவது வாா்டு வெள்ளையாபுரம், 15-ஆவது வாா்டு சிங்கப்புலியாபட்டி பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் கமுதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், அலுவலக வாசலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு பாஜக கமுதி தெற்கு ஒன்றியத் தலைவா் வேலவன், பேரூராட்சி உறுப்பினா்கள் திருக்கம்மாள் ஆலடிஈஸ்வரன், சத்யா ஜோதிராஜா, தேவேந்திரகுல வேளாளா் இளைஞா் எழுச்சிப் பேரவை நிறுவனா் தளபதிராஜ்குமாா், பாஜக நிா்வாகி எஸ்.கே. தேவா் உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டம் காரணமாக கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளஞ்செழியன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.