Amit Shah: BJP-க்கு Backfire ஆன Ambedkar விவகாரம்; Rahul-க்கு குறிவைக்ககும் MPs?...
பைக் டாக்சியை தடை செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்
சென்னை: பைக் டாக்சியை தடை செய்யக்கோரியும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி தர வலியுறுத்தியும் பைக் டாக்சி விவகாரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் பேசியதை கண்டித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள லேன்ஸ் கார்டன் சாலையில் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கோட்டை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தினை தொடங்கி வைத்த அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பைக் டாக்சியை தடை செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். சட்டத்துக்கு புறம்பாக இயங்கும் பைக் டாக்சிகளின் ஓட்டுநர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் கடந்து 10 ஆம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் பேசியிருந்தார். அவருடைய பேச்சின் காரணமாக தான் தமிழக முழுவதும் பல்வேறு குழப்பங்களும் தகராறுகளும் ஏற்படுகிறது.
சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் பைக் டாக்சிக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள எந்த சட்டத்திலும் அனுமதி கிடையாது, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது. கொள்கை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு எந்த விதமான செயலிலும் ஈடுபடவில்லை என்ற காரணத்தினால் போக்குவரத்து ஆணையர் பைக் டாக்சிகளை கையகப்படுத்த வேண்டும் அதற்கு உரிய கணக்குகளை வழங்க வேண்டும் என்று அனைத்து ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஒரு அரசாணை வழங்கப்பட்டது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன், மத்திய அரசு மற்றும் நீதிமன்றங்களின் தெளிவான வழிகாட்டுதல்களுக்காக தமிழகம் காத்திருப்பதாகவும், மத்திய அரசும், நீதிமன்றமும் அறிவுறுத்திய பிறகே பைக் டாக்சி சேவையை தடை செய்வது குறித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால், தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படாது என கூறினார்.
பைக் டாக்சிகளை தடை செய்வதற்கு பதிலாக ஆட்டோ ஓட்டுநர்கள் மீது இருக்கும் தவறான முரண்பாடுகள் அடிப்படையிலேயே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் அவ்வாறு பேசியுள்ளார் என நாங்கள் கருதுகிறோம்.
இதையும் படிக்க |புதுச்சேரியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!
ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதற்கு மத்திய அரசு காரணம் கிடையாது, மாநில அரசின் தவறே.
2022 இல் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் தமிழக அரசு தற்போது வரை அமல்படுத்தவில்லை.
ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மக்களிடம் இருந்து பணம் கொள்ளை அடிக்காமல் இருப்பதற்கு தமிழக அரசு சார்பில் ஒரு செயலியை உருவாக்குதற்கு திட்டம் வழங்கினோம் , ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் கமிஷன் தொகையை குறைத்து பிளாட்பார்ம் கட்டணமாக தொடங்கிய பின் தமிழக அரசின் செயலியின் பணிகள் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் பைக் டாக்சிகளை அமல்படுத்துவோம் என கூறியதை திரும்பப்பெற வலியுறுத்தியும், பைக் டாக்சிகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும், 11 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரை நேரடியாக சந்தித்து மனு அளிப்பதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் கோட்டை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார்.
இதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று இன்று அல்லது நாளைக்குள் அவருடைய பேச்சினை திரும்ப பெறாவிட்டால் அடுத்த கட்டமாக நடைபெறும் போராட்டங்கள் மிகத் தீவிரமாக இருக்கும் என்று கூறினார்.