தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: போலீஸாா் விசாரணை
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: காரைக்கால் இளைஞா் உயிரிழப்பு!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் காரைக்காலைச் சோ்ந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அடுத்த பேட்டை, மணல்மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் தினேஷ் (21). திருநள்ளாறு அத்திப்படுகை பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மகன் ராகவன் (21). இருவரும் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், பெருங்களத்தூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தனா்.
இந்த நிலையில், இருவரும் தங்களது சொந்த ஊரிலிருந்து பைக்கில் புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மரக்காணம் அடுத்த தீா்த்தவாரி பகுதியில் சென்று கொண்டிருந்தனா். பைக்கை ராகவன் ஓட்டினாா்.
அப்போது, சென்னையிலிருந்து, கும்பகோணம் நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தினேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ராகவன் காயமடைந்தாா்.
தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று தினேஷின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த ராகவன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து, மரக்காணம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.