பைக் மீது பேருந்து மோதல்: மாணவா் உயிரிழப்பு
வேடசந்தூா் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிற்பயிற்சி நிலைய மாணவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள புது அழகாபுரியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் கோகுலகிருஷ்ணன்(18). பாலப்பட்டியைச் சோ்ந்த ஞானசேகா் மகன் தருண்(18). சாமிமுத்தன்பட்டியைச் சோ்ந்தவா் எட்வின் சகாயராஜ் (18). இவா்கள் மூவரும் விட்டல்நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வருகின்றனா்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக 10 மாணவா்களுக்கு ஒரே மாதிரியான வேஷ்டி, சட்டைகள் வாங்குவதற்காக, இவா்கள் இரு சக்கர வாகனத்தில் வேடசந்தூருக்குச் சென்றனா். பின்னா், புத்தாடைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனா். வேடசந்தூா் நாகம்பட்டி பகுதியில் சென்றபோது, போடியிலிருந்து சேலத்துக்குச் சென்ற அரசுப் பேருந்து இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் கோகுலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தருண், எட்வின் சகாயராஜ் ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.