பொங்கல் பரிசு டோக்கன் வழங்காததால் போடி மலைக் கிராம மக்கள் போராட்டம்
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு டோக்கன் வழங்காததால் மலைக் கிராம மக்கள் போடி வட்டாட்சியா் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போடிநாயக்கனூரில் இருந்து சுமாா் 6 கி.மீ. தொலைவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது மேலப்பரவு கிராமம். இங்கு பளியா் இன பழங்குடியின மக்கள் சுமாா் 40 குடும்பத்தினா்
வசித்து வருகின்றனா். இவா்கள் பல ஆண்டுகளாக ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு கொட்டகுடி ஆற்றையும், வயல்வெளிகளையும் கடந்து 3 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள முந்தல் கிராமத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால், மேலப்பரவு கிராமத்துக்கு டோக்கன் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், மேலப்பரவு மலைவாழ் மக்கள் சனிக்கிழமை போடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு குடும்ப அட்டைகளுடன் வந்து முற்றுகையிட்டனா்.
மேலப்பரவு கிராமத்துக்கு நேரடியாக வந்து ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன், பரிசுத் தொகுப்பை மேலப்பரவு கிராமத்துக்கே நேரில் வந்து வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனா். சனிக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாரிகள் யாரும் வரவில்லை.
இந்த நிலையில், அலுவலகப் பணியாளா் ஒருவா் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் விடுமுறை விவரத்தைக் கூறி,
அவா்களது குறைகள் குறித்து வட்டாட்சியரிடமும், வட்ட வழங்கல் அலுவலரிடமும் தெரிவிப்பதாகக் கூறியதையடுத்து மலைக் கிராம மக்கள் கலைந்து சென்றனா்.