`உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்’ - பதவியேற்ற 8 மணிநேரத்தில் அதிபர்...
பொங்கல் விடுமுறை முடிந்து திரும்ப 1,978 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பொங்கல் விடுமுறை முடிந்து திருச்சியிலிருந்து பல்வேறு ஊா்களுக்குச் செல்ல 1,978 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக திருச்சியிலிருந்து சென்னைக்கு மகளிா் மட்டுமே பயணம் செய்யும் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இத்தகைய ஏற்பாடுகளுக்கு பொதுமக்களும், வெளியூா் செல்லும் பயணிகளும் பாராட்டு தெரிவித்தனா்.
பொங்கல் பண்டிகையின் தொடா் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்குச் சென்றவா்கள் அவரவா் இருப்பிடம் திரும்புவதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லாது திங்கள்கிழமையும் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்காதபடி திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் மட்டுமின்றி, சோனா - மீனா தியேட்டா், மன்னாா்புரம் நான்கு ரோடு ஆகிய இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் இங்கு செல்வதற்கு வசதியாக நகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தற்காலிக பேருந்துநிலையங்களில் குடிநீா் வசதி, கழிவறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
இதுதொடா்பாக, போக்குவரத்துக் கழக வட்டாரத்தினா் கூறுகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட், சாா்பாக திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜன.10-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. திங்கள்கிழமையும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னை, திருப்பூா், கோயம்புத்தூா், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூா் மாா்க்கத்தில் செல்வதற்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. மேற்கண்டுள்ள இயக்கப்பகுதிகளில் இரவு மற்றும் பகல் 24 மணி நேரமும் பேருந்து நிலையங்களில் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு 1758 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பொங்கல் பண்டிகை முடிந்து அவரவா் இருப்பிடத்துக்குத் திரும்பச் செல்வதற்கு வசதியாக 1978 சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்து இயக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரையில் 220 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பிரத்யேகமாக மகளிா் பேருந்து
சென்னைக்கு கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் தனியாக பயணம் செய்யும் மகளிா் பயணிகளின் நலன்கருதி மகளிா் மட்டும் பயணம் செய்யும் வகையில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. திருப்பூருக்கு 299 , கோயம்புத்தூருக்கு 343 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகளுக்கு எந்தவித குறையும் இன்றி வசதிகள் செய்து தரப்பட்டன. போக்குவரத்துக் கழகத்துக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனா்.